ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: ஏழு நாளில் 22 லட்சம் சப்ளை
பிழை திருத்தப் பணி வேகமாக நடப்பதால், ஒரே வாரத்தில், 22 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. காகிதத்தால் ஆன, அந்த கார்டுகளுக்கு பதிலாக, 'ஆதார்' விபரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் விபரம் தராதது மற்றும் அவற்றில் இருந்த பிழைகளால், அந்த கார்டு வழங்கும் பணி தாமதமாகி வந்தது. ஆக., மாதம் வரை, 1.42 கோடி ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரே வாரத்தில், 22 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி மற்றும் பொது வினியோக திட்ட, 'மொபைல் ஆப்' வாயிலாக, ஆதார் விபரங்கள் பெறப்பட்டன. அப்போது, ஆங்கில விபரங்கள் மட்டுமே, உணவு வழங்கல் துறை, 'சர்வரில்' பதிவாகின. ஸ்மார்ட் கார்டு, தமிழில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால், ஆதார் விபரங்களை, தமிழில் மொழி பெயர்க்கும்போது, பிழைகள் ஏற்பட்டன. அவற்றை சரி செய்து தருமாறு, மக்களிடம் தெரிவித்தும், பலர் செய்யவில்லை. சரியான விபரங்களை தந்தவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு தரப்படுகிறது. தற்போது, பிழைகளை சரிசெய்ய, மக்கள் ஆர்வமாக முன்வருவதுடன், தெளிவான புகைப்படமும் தருகின்றனர். இதனால், இந்த வாரத்தில் மட்டும், 10 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளன; 12 லட்சம் கார்டுகள், தயார் நிலையில் உள்ளன. இம்மாத இறுதிக்குள், எஞ்சிய, 28 லட்சம் பேருக்கும் கார்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.