ஜனாதிபதி நேரில் அழைத்து பாராட்டு 22 தமிழக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
விருது பெற்ற ஆசிரியர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி, ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு 374 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 22 ஆசிரிய, ஆசிரியைகள் இடம் பெற்றனர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா, டெல்லி விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். இந்த விருது ஏற்படுத்தப்பட்ட 1958-ம் ஆண்டு முதல் இதுவரையில் ஜனாதிபதி வழங்குவதுதான் மரபாக இருந்து வந்தது. இந்த முறை, மரபுக்கு மாறாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
விழாவில் வெங்கையா நாயுடு பேசுகையில், “பிற மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது” என்று குறிப்பிட்டார்.
விழா நிறைவு பெற்றவுடன், விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆசிரியர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டி பேசினார். பின்னர் ஆசிரியர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இணை மந்திரி உபேந்திர குஷ்வாஹா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.