6 விதிமுறைகளை மீறுவோரிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும்: சென்னை பெருநகர காவல் துறை
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்லும் புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இந்த விதிமுறை குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிச் செல்லுதல்,, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 விதிமுறைகளை மீறுவோரிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும்.
சிலநேரங்களில் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் காவல் துறை அதிகாரிகள் அல்லது போக்குவரத்து அதிகாரிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்கும்போது கட்டாயமாக காண்பிக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறுவோரின் அசல் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக குறைந்தது 3 மாதங்கள் தற்காலிகமாக ரத்து செய்து வைக்கப்படும் எனவும் கடந்த 3 மாதங்களில் மட்டும் மேற்கண்ட 6 போக்குவரத்து மீறல்களிலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.