"ப்ளு வேல்" பற்றி எஸ்.எம்.எஸ்., : தமிழக அரசு எச்சரிக்கை
ப்ளு வேல் விளையாட்டு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவோர், சட்டப்படி தண்டிக்கப்படுவர்' என, அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'நீலத் திமிங்கல சவால்' என, அழைக்கப்படும், ஆன் - லைன் விளையாட்டு, 'ப்ளு வேல்' என்ற பெயரில், இணையதளத்தில் பரவி வருகிறது. இதை விளையாடுவோர், சவால்கள் என்ற பெயரில் துாண்டி விடப்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 'ஓர் அமைதியான இல்லம்; ஒரு திமிங்கலக்கடல்; அதிகாலை, 4:20 மணிக்கு என்னை எழுப்பு' என, பல்வேறு பெயர்களில், இவ்விளையாட்டு புழக்கத்தில் உள்ளது. இவற்றை பெரும்பாலும், 'ஸ்மார்ட் போன்' அல்லது அதுபோன்ற சாதனங்களை பயன்படுத்தியே விளையாட முடியும். 'இவற்றால், 12 வயது முதல், 19 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். 'இதை விளையாடுவோர் தனிமையை விரும்புவர்; குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவர்; வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவது குறித்தும், மரணம் குறித்தும் அதிகம் விவாதிப்பவர்களாக இருப்பர்' என, மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு சாப்பிடும் முறையிலும், துாங்கும் பழக்கத்திலும், மாறுபாடுகள் தென்படும். எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், சிறுவர்கள் நடத்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும். இவ்விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடுவது தெரிந்தால், அவர்கள், இணையதளம் மற்றும் மொபைல் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், தடுக்க வேண்டும்.உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனை அல்லது அலுவல் சாரா அமைப்புகள் மூலம், உளவியல் ரீதியாக அறிவுரைகள் வழங்க வேண்டும். 'ப்ளூ வேல்' விளையாட்டு தொடர்பான, நேரடி இணைப்புகளை, வேறு பிற நேரலை இணைப்புகளுக்கு, அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
இந்திய சட்டப்படி, இவ்விளையாட்டு வழியே பிறரை தற்கொலைக்கு துாண்டுவது, சட்டத்திற்கு புறம்பான செயல். தண்டனைக்குரிய குற்றம். நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், இவ்விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் வகையில், எஸ்.எம்.எஸ்., எதையும் பிறருக்கு அனுப்பினால், சட்டப்படி தண்டிக்கப்படுவர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.