ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பாதிப்பு 69 சதவீத இடஒதுக்கீடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு: நாகர்கோவில் மாணவி தொடர்ந்தார்
தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாகர்கோவில் மாணவி புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசின் அரசாணைப்படி, தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதமும், ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீத இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு உள்ளதால் அது, அதற்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. ஆனால், ‘9வது அட்டவணையில் எந்த சட்டம் இடம் பெற்று இருந்தாலும், அவையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவைதான்’ என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
அதே நேரம், கடந்த 2010ல் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை செல்லும்’ என்று தீர்ப்பளித்தது. எனினும், ஓராண்டுக்குள் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை மறு நிர்ணயம் செய்யும்படி தமிழக அரசுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்துக்கும் உத்தரவிட்டது.
ஆனால், ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தாமல், கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதால ‘69 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் தொடரும்’ என அறிவித்தார். இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டும் அதை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த திருமால் மங்கள் என்ற மாணவி, 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த ஒதுக்கீடு முறையால் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சேர்க்கையின்போதும் தமிழக மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி, பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த இடஒதுக்கீடுக்–்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவை அனைத்தையும் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.