இந்தியர்கள் சிறந்தவர்கள், இரு நாடுகளிடையே ஒற்றுமை அவசியம்: சீன பத்திரிகையாளர் பேட்டி
இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் 9-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் சியாமென் நகரில் 4, 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் இந்திய செய்தி நிறுவனத்துக்கு சீன பத்திரிகையாளர் டாங் யுங்காய் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்திய மக்கள் அனைவரும் சிறந்தவர்கள், உண்மையானவர்கள். அதனாலேயே எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். இந்தியர்கள் நேர்மையில் சிறந்தவர்கள். நான் இந்தியாவில் உள்ள ஒரு பிரபல பல்கலையில் ஹிந்தி பயின்றுள்ளேன்.
என்னால் ஹிந்தி மொழியில் எழுதி, படித்து, பேசத் தெரியும். அங்கு பயின்ற போது பல இந்தியர்களுடன் நட்பு பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மிகவும் மதிக்கிறேன்.
இரு நாடுகளிடையே நல்லுறவு வேண்டும். அது எதிர்காலத்தை சிறப்பானதாக்கும். இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் இணைந்து இரு நாடுகளிடையிலான பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும். அதுவே எனது விருப்பம்.
சீனர்களில் பெரும்பாலானோர் இந்திய திரைப்படத்தின் ரசிகர்கள். தற்போது கூட நான் தங்கல் படம் பார்தேன். அமீர்கான் சிறப்பாக நடித்துள்ளார். இந்திய இசையும் மிகவும் பிடிக்கும் என்றார்.