இன்று முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: மாணவர் கூட்டமைப்பு
நீட் தேர்வில் மத்திய மாநில அரசுகளின் குளறுபடியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா சம்பவத்துக்கு நீதி கோரி செவ்வாய்க்கிழமை (செப்.5) முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் வ.கவுதமன், மாணவர்கள் கூட்டமைப்பின் கதிரழகன், வேல் ஆகியோர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஏழை மாணவி அனிதாவின் மருத்துவக் கனவு கருகிப் போனதற்கு மத்திய-மாநில அரசுகளே காரணம்.
பல்வேறு குளறுபடிகளைக் கொண்டு, பாரபட்சத்துடன் இருக்கும் நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தைக் கொண்டு வந்து, ஒரே மாதிரியான திறன் கொண்ட ஆசிரியர்களைக் கொண்டு, பல்வேறு வசதிகள், கட்டமைப்புகளைக் கொண்ட பள்ளிக்கூடங்கள் இருந்து அதில் பயிலும் மாணவனுக்கு நீட் தேர்வை நடத்தினால் அப்போது நாம் அதனை ஏற்றுக் கொள்ளலாம். தற்போது அந்த மாதிரியான வகையில் நீட் தேர்வு இல்லை. எனவே, இத்தகைய முரண்பாடுகளைக் கொண்டுள்ள நீட் தேர்வை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யும் வரை பள்ளி, கல்லூரி, மருத்துவ மாணவர்கள் உள்பட செவ்வாய்கிழமை (செப்.5) முதல் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ் உணர்வுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.