ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி
சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்கிறார் உலக பசுமை வளர்ச்சிக் குழு நிறுவனர் கே.பாலசுப்பிரமணியன்.
மனிதனின் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் தோலைப் போன்று, இந்த பூமியை சூரியனில் இருந்து வரும் தீமை தரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது ஓசோன் படலம்.
பூமிப் பந்தின் மீது போர்வை போர்த்தியதுபோல படர்ந்துள்ள ஓசோன் படலம் 230 மி.மீ. இருந்து 500 மி.மீ. வரை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்தியாவில் ஓசோன் படலத்தின் அடர்த்தி 280 முதல் 300 மி. மீ. வரை உள்ளது. இதன் காரணமாக பூமியின் சராசரி வெப்ப நிலை உயருகிறது. இதனால் பனிப் பிரதேசங்களில் பனி வேகமாக உருகி கடல் மட்டம் உயர வழிவகுக்கிறது.
இதுபோன்று ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகளால் சங்கிலித் தொடர் போன்ற அடுக்கடுக்கான விளைவுகளையும், பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்க வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக பிரச்சார இயக்கம் நடத்தியும், 30 ஆயிரம் துளசிச் செடிகளை மக்களுக்கு வழங்கியும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துளசி குறித்த சிறு வெளியீடுகளை வெளியிட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருச்சியைச் சேர்ந்த உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் நிறுவனரான கே.பாலசுப்பிரமணியன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் ஒரு எதிர்நிகழ்வு இருக்கிறது. நாம் பயன்டுத்தும் ஏசி, பிரிஜ் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் வாயுதான் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அரசு, மூங்கில், துளசி
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி. இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.
ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.
துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது. துளசி ஓசோனைப் பாதுகாப்பதுடன், 4 ஆயிரம் விதமான வியாதிகளுக்கு குணமளிக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. தினந்தோறும் 4 துளசி இலையை உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகி நோய்கள் நம்மை அண்டாது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பிற் போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும்..
பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் அல்லது 720 கோடி மூங்கில் மரங்கள் அல்லது 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை. இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்றார் அவர்.