நவோதயா பள்ளிகள்: தமிழக அரசு கருத்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம்
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமைக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு கருத்து தெரிவிக்க இறுதி அவகாசம் வழங்கி, விசாரணையை செப். 11 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார், தாமஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
அதில், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கியது. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு இலவச இடம் வழங்கினால் போதுமானது. ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் ஆரம்பிப்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தரமான கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும். தவறான புரிதல் காரணமாகவே நவோதயா பள்ளிகளை வேண்டாம் என்கின்றனர். இந்தியாவில் உள்ள நவோதயா பள்ளிகளில் இருந்து 14,183 பேர் நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 11, 875 பேர் தகுதி பெற்றிருக்கின்றனர் என்றார்.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்து தமிழக அரசின் கருத்தைத் தெரிவிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், செப். 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.