வருகிறது வடகிழக்கு பருவமழை: பேரிடரை தடுக்க அதிகாரிகள், அலர்ட்
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், பழைய ஆபத்தான கட்டடங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற, அவற்றின் உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தடுப்பு நடவடிக்கை:
தற்போது, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்., இரண்டாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த பருவத்தில், மழை பொழிவு அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உறுதியற்ற கட்டடங்கள் இடிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டடங்கள்; முறையான பராமரிப்பு இல்லாதவை; மழைநீர் வடிகால் வசதி இல்லாத கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
பருவமழை காலத்தில், ஆண்டுக்கு, 30 பேர் வரை, இத்தகைய விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைவதாகவும் தெரிய வந்துஉள்ளது. பேரிடர் மேலாண்மை விதிகளுக்கு உட்பட்டு, இந்த விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, உள்ளாட்சித் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுவர்களை ஒட்டிய பகுதிகளில், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு தண்ணீர் தேங்க விடக் கூடாது. பெருமழை காரணமாக, சுவர்களின் அருகில் தேங்கும் தண்ணீர், உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கான வசதிகள் இருப்பதை, கட்டட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அறிவுறுத்தல்:
முப்பது ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அது போன்ற கட்டட உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, அதில் வசிப்பவர்களை வெளியேற்றும்படி அறிவுறுத்தப்படும். தேவைப்பட்டால், ஆபத்தான கட்டடங்களில் வசிப்பவர்களை, கட்டாயமாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தாழ்வான பகுதிகள், ஆபத்தான பகுதிகளில் உள்ள கட்டடங்களை, மக்கள் பயன்படுத்தாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்