மாணவர்கள் போராட்டத்தை ஒழுங்குபடுத்துங்க! எஸ்.பி.,க்களுக்கு போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு
'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதால், அதை, ஒழுங்குப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை ஒழுங்குபடுத்துங்க! எஸ்.பி.,க்களுக்கு போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு
'நீட்' தேர்வுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, அரியலுார் மாணவி அனிதா, சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதனால், 'நீட்' தேர்வுக்கு எதிராக, மாநிலம் முழுவதும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், போராட்டங்கள் நடப்பதால், சென்னை உட்பட, பல மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.'ஜல்லிக்கட்டு போராட்டம் போல, 'நீட்' தேர்வுக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரள வேண்டும்' என, சினிமா பிரபலங்களும் உசுப்பேத்தி வருகின்றனர்.
சட்டம் - ஒழுங்கை பாதிக்கும்
அதனால், கல்லுாரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, சாலை மறியல்,
முற்றுகை என, பல விதமானபோராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம். ஆனால், சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையில், அனைத்து இடங்களிலும் போராடு வதை அனுமதிக்க முடியாது.
ஒழுங்குபடுத்த உத்தரவு
தமிழகத்தில், ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு, போராட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பை மாணவர்கள் பதிவு
செய்யலாம்.
மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டம்நடத்துவது ஏற்புடையது அல்ல. எனவே, மாநிலம் முழுவதும், மாணவர்கள் போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, மாவட்ட, எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, மெரினா கடற்கரையிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தலைமை செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு
'நீட்' தேர்வுக்கு எதிராக போராடுவோர், தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளதாக வெளியான தகவலால், சென்னை, ராஜாஜி சாலையில், நேற்று காலை முதல் மதியம் வரை, இரு சக்கர வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், ஆங்காங்கே தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.தலைமை செயலகத்தில், வழக்கத்தை விட, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மதியத்திற்கு மேல், ராஜாஜி சாலை வழியே, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.-