நீட் தேர்வை ரத்து செய்யுங்க! ; அனிதா குடும்பத்தினர் கோரிக்கை
மாணவி அனிதாவின் உறவினர்கள், தமிழக அரசு அளித்த நிதி உதவியை வாங்க மறுத்ததுடன், 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மூட்டை துாக்கும் தொழிலாளியின் மகளான அனிதா, பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண் எடுத்தார்.
'நீட்' தேர்வு எழுதிய அவருக்கு, மருத்துவம் படிக்க, இடம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'நீட் தேர்வு கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மனமுடைந்த அனிதா, 1ம் தேதி துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
'தமிழக அரசு சார்பில், அனிதாவின் குடும்பத்திற்கு, 7 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதன்படி, 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அரியலுார் கலெக்டர் லட்சுமி பிரியா நேற்று, அனிதாவின் குடும்பத்தினரிடம் வழங்கச் சென்றார். அனிதா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், காசோலையை வாங்க மறுத்து, கலெக்டரை திருப்பி அனுப்பினர்.
அனிதாவின் அண்ணன் மணிரத்னம், ''நீட் தேர்வால், என் சகோதரி போல் ஏராளமான சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் விவகாரத்தில், சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டும்.
''அதன்பின், நிதியுதவியை பெற்றுக் கொள்கிறோம். என் சகோதரிக்கு ஏற்பட்ட நிலைமை, வேறு எந்த மாணவருக்கும் ஏற்படக் கூடாது,'' என்றார்.