இரண்டு மனைவிகள் கொண்டவருக்கு ஆசிரியராகும் தகுதி இல்லை: உத்தர பிரதேச அரசு உத்தரவு
இரண்டு மனைவிகள் கொண்டவருக்கு பள்ளிகளில் உருது மொழி ஆசிரியராகும் தகுதி இல்லை என்று உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே 3,500 உருது ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்த ஆசிரியர்கள் நியமனம் குறித்து விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், அந்த நோட்டீசுடன் சேர்த்து ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளை உடையவர்களை உருது ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரப் பிரதேச கல்வி அமைச்சர் அகமது ஹசன் கூறுகையில் "ஊழியர்கள் இறந்துவிட்டால் அவரது ஓய்வூதியம் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதில் உள்ள குழப்பங்களைக் களைவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த உத்தரவு இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.