செம்மொழி நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
தமிழாய்வு மத்திய நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை எழுதிய கடித விவரம்:
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும் என்பதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.24 கோடி நிதியானது, மத்திய பொதுப்பணித் துறைக்கு ஒதுக்க ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வலுப்படுத்துங்கள்: இந்தச் சூழ்நிலையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடனோ அல்லது வேறு பல்கலைக்கழகத்துடனோ இணைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். தமிழாய்வு மையத்தின் தன்னாட்சி அதிகாரத்தைக் காக்க வேண்டும்.
தமிழாய்வு நிறுவனத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது செம்மொழியான தமிழ் மொழியில் ஆய்வுகளையும், கற்பித்தல் பணிகளையும் மேற்கொள்ள பேருதவியாக இருக்கும்.