தாவர வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு தாவர வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு மூலிகை சேகரிப்போர், மூலிகை விவசாயிகள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பம் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை மற்றும் வனத் துறைகளில் மூலிகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் இதில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம். உறுப்பினர் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
உறுப்பினர் பதிவு செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் 2018 -ஆம் ஆண்டு மார்ச் 31 -ஆம் தேதி வரை நடைபெறும். ஆர்வமுள்ளோர் உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பித்து உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பப் படிவம், கட்டணம் விவரம் , பதிவு செய்வதற்கான தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை சுகாதாரத் துறை இணையதளத்தில் பெறலாம் என்று தமிழ்நாடு தாவர வாரியத்தின் உறுப்பினர் செயலர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில மூலிகைத் தாவர வாரியத்தில் மூலிகை சார்ந்து செயல்பட்டு வரும் மூலிகை விவசாயிகள், மூலிகை சேகரிப்போர், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழிலதிபர்கள், மருந்து உற்பத்தியாளர்கள், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தேவையான நிதி உதவி மற்றும் மானியம் போன்றவை தேசிய மூலிகை தாவர வாரியத்திடமிருந்து பெறப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு வாரியத்தின் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும்.