காவலர் தேர்வு: 2,614 பெண்கள் உள்பட 15,622 பேர் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் நடைபெற்ற காவலர் தேர்வில் 2,614 பெண்கள் உள்பட 15,622 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக, தமிழக சீருடை ப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல்துறையில் உள்ள 13,137 இரண்டாம் நிலைக் காவலர்கள், 1015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், 1512 தீயணைப்புப் படை வீரர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 410 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை எழுதுவதற்கு 6.32 லட்சம் பேர் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், தேர்வை 4.82 லட்சம் பேர் மட்டுமே எழுதினர். இதில் சுமார் 1.50 லட்சம் பெண்கள், 50 திருநங்கைகளும் அடங்கும். எழுத்துத் தேர்வு முடிவு கடந்த ஜூலை 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஜூலை மாதம் இறுதியில் இருந்து உடல் தகுதி தேர்வு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல்,ராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி ஆகிய 15 இடங்களில் நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் 2614 பெண்கள் உள்பட 15,622 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வியாழக்கிழமை (31-08-2017) தெரிவித்தது. காவலர் தேர்வு எழுதியோர், www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவை காணலாம். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கு மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு, காவல்துறையின் நற்சான்றிதழ் ஆகிய நிலைகள் உள்ளன. இந்த நிலைகளில் கடப்பவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூறியுள்ளது.