தனியார் வசமாகிறது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள்!
தமது வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார் வசம் ஒப்படைக்க பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியில், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் மையங்கள், நேரடி வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொருத்தவரையில், வாடிக்கையாளர் சேவை மையங்களில் 1500, 1501ஆகிய அழைப்புகள் வழியாக, தனியார் பிரதிநிதிகளை கொண்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், நேரடி வாடிக்கையாளர் சேவை மையங்களில் புதிய இணைப்புகள், சிம் கார்டு பெறுதல், மோடம் கருவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மூலமாகவே வழக்கப்பட்டு வருகின்றன.
தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு: இந்த நிலையில், நேரடி சேவை மையங்களின் ஊழியர்கள் சிலர் வாடிக்கையாளர்களுக்கு சரியாக சேவை அளிப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து, நேரடி சேவை மையங்களின் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு ஆலேசானைக் குழு, பிஎஸ்என்எல் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கூறியதாவது:
அரசு நிறுவனமான பி எஸ்என்எல், லாப நோக்கத்தைவிட சேவையை நோக்கமாக கொண்டே செயல்படுகிறது. இதன்படி, நேரடி வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களே, வாடிக்கையாளர்களுக்கு இதுவரை சேவை அளித்து வருகின்றனர். இதன்மூலம், பி.எஸ்.என்.எல். சேவை திட்ட விற்பனையில் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1500 கோடி வரை லாபம் ஈட்டப்பட்டு வருகின்றது.
நம்பகத்தன்மை பாதிப்பு: இந்த நிலையில், சேவை மையத்தை தனியார் வசம் ஒப்படைப்பது, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை எந்த விதத்திலும் திருப்திபடுத்தாது. அத்துடன் அவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையாது. மாறாக,பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான நம்பகத்தன்மை பாதிக்கும். எனவே, வாடிக்கையாளர் சேவை மையத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டு, பிஎஸ்என்எல் ஊழியர்களை கொண்டே நேரடி வாடிக்கையாளர் சேவை மையங்களை மேம்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.
சிறப்பான சேவைக்கு: இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சேவை மையங்கள் குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, இம்மையங்களை மேம்படுத்தி தனியாருக்கும் மேலான சேவையை அளிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதுபோல், ஊழியர்கள் நேரடி விற்பனை முகாம்களில் சலுகைத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்துள்ளனர்.
இருப்பினும், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி மையங்கள், நேரடி வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி, மேலும் சிறப்பான சேவைகள் வழங்கவே இவற்றை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, 3,000 -க்கும் மேற்பட்ட நேரடி சேவை மையங்கள், பிஎஸ்என்எல் -ஒருங்கிணைந்த தனியார் முகமையினருக்கு (integrated franchisee) வழங்கப்படவுள்ளன. 3 மாதத்துக்குள் இது நடைமுறைக்கும் வரலாம் என அவர்கள் தெரிவித்தனர்.