அசல் வாகன உரிமம் இல்லாவிட்டால் ரூ.500 அபராதம்
வாகன ஓட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் அசல் வாகன உரிமம் வைத்திருக்காவிட்டால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களோ, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கின்ற வாகன ஓட்டிகளோ பயப்படத் தேவையில்லை.
தவறு செய்கிறவர்களிடமிருந்து மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமம் பெறப்படும். இதற்காக எந்தவொரு சிறப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை. வழக்கமான முறையிலேயே சென்னையில் வாகன சோதனை நடைபெறும் என சென்னை காவல்துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
நகல் வாகன உரிமம் பெற...
அசல் வாகன உரிமம் கட்டாயம் என்ற உத்தரவையடுத்து, இந்த ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகள், புதிய நகல் வாகன உரிமம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
நகல் வாகன உரிமம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அசல் வாகன உரிமம் தொலைந்துவிட்டதாக தங்கள் வசிப்பிடத்துக்குட்பட்ட காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்து, அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை காவல் துறையிடமிருந்து பெற வேண்டும்; அசல் வாகன உரிமம் தொலைந்துவிட்டதாக ரூ.20 மதிப்புள்ள பத்திரத் தாளில் சுய சான்று அளிக்க வேண்டும்; இந்தச் சான்றுகளுடன் வசிப்பிடத்துக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து உரிய படிவத்தில் (மருத்துவரின் சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும்) இரு சக்கர வாகனமாக இருந்தால் ரூ.370 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்; இரு சக்கர வாகனம் -கார் இணைந்த நகல் வாகன உரிமமாக இருந்தால் ரூ.430 செலுத்த வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பித்த பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். 10 அல்லது 15 நாள்களுக்குள் நகல் வாகன உரிமம் அளிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.