தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின மாநில கட்டுரைப் போட்டி: மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பு
ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கெளரவத் தலைவர் ஆகாஷ் முத்துக்கிருஷ்ணன், தலைவர் கே.காத்தவராயன், செயலர் பி.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாநில அளவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற தலைப்பிலும், ஆசிரியர்களுக்கு என்னைச் செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எங்க ஊரு... எங்க பள்ளி என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கட்டுரைகள் அனைத்தும் ஏ4 தாளில் 3 பக்கம் மட்டும் இருக்க வேண்டும்.
கட்டுரைகள் கையால் எழுதப்பட்டிருந்தாலே போதும். மாணவர்கள், ஆசிரியர்கள் எழுதும் கட்டுரையின் முகப்பில் பெயர், பள்ளி (அ) கல்லூரியின் முகவரி, அஞ்சல் எண், தொடர்பு எண் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இதேபோல, ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கட்டுரையின் முகப்பில் பெயர், வசிப்பிட முகவரி, அஞ்சல் எண், தொடர்பு எண் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்.
படைப்புகள் அனைத்தும் புதிதாகவும், பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருக்க வேண்டும்.
சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளான விஞ்ஞான சிறகு, துளிர், விழுது உள்ளிட்ட இதழ்களில் பிரசுரம் செய்யப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் சிறந்த 3 படைப்புகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.
படைப்புகள் அனைத்தையும், கே.காத்தவராயன், ஆசிரியர் தின போட்டி ஒருங்கிணைப்பாளர், 2-கம்மாளர் தெரு, புதுப்பாளையம் அஞ்சல், செங்கம் வட்டம், திருவண்ணாமலை 606 705- என்ற முகவரிக்கு செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 9751124532 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.