24ஆண்டுகள் கழித்து பிஎஸ்எல்வியின் 2 ஆவது தோல்வி
இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச்-ஐ, பி.எஸ்.எல்.வி. சி 39 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை (31-08-2017) விண்ணில் நிலை நிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த ராக்கெட் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சீறிப்பாய்ந்தது. சரியாக 19 நிமிஷம் 25 நொடியில் செயற்கைக்கோளை விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்த ராக்கெட் முயன்றது. ஆனால், செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்த பிஎஸ்எல்வி சி39 ராக்கெட்டால் முடியவில்லை. இதனால் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் உடன் சேர்த்து இப்போது 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 2013-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் நிறைவடைந்ததையடுத்து மாற்றாக இந்தச் செயற்கைக்கோள் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச்) அனுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலில் அனுப்பப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானது. சரியான நேரக் கணக்கீட்டில் சிறிய தவறு நேர்ந்தாலும், துல்லியமாக இடத்தைக் கண்டறிய முடியாது. இதனையடுத்து பழுதான செயற்கைகோளுக்கு மாற்றாக 3 'ருபிடியம் அணு கடிகாரங்கள்' பொருத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைகோளை இப்போது விண்ணுக்கு அனுப்ப முயன்றது இஸ்ரோ.
தனியார் தயாரித்த செயற்கைக்கோள்: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோளை பெங்களூரு 'ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ்' எனும் ராணுவத்துக்கு உபகரணம் தயாரிக்கும் நிறுவனம் 8 மாதக் கால உழைப்பில் தயாரித்துளள்ளது. 70 விஞ்ஞானிகள் கொண்ட இஸ்ரோ குழுவினர் செயற்கைக்கோள் தயாரிப்பை மேற்பார்வையிட்டனர். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1எச் செயற்கைக்கோளில் அதிநவீன சோலார் பேனல்கள், மற்றும் பேட்டரி, சென்சார் கருவிகள், எல்5-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் உள்பட அதிநவீன மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை செயற்கைகோளின் செயல்பாடுகளை துல்லியமாகக் கணிக்கக்கூடிய அளவில் பொருத்தப்பட்டன. இதன் மொத்த எடை1425 கிலோ. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
ருபிடியம் அணு கடிகாரம்: துல்லியமாக இடத்தைக் கண்டறிய வேண்டுமானால் செயற்கைகோள்களில் மிகச்சரியான நேரம் பின்பற்றப்பட வேண்டும். இதனால் அணுக்கதிர் வீச்சு மற்றும் நுண்ணலை போன்றவற்றை கணக்கிட்டு சரியான நேரத்தைக் கண்டறிய வேண்டும். இதனால் அணுக்கதிர் வீச்சு மற்றும் நுண்ணலைகளை வெளிப்படுத்தும் வெள்ளி போன்ற தோற்றம் கொண்ட ருபிடியும் தனிமம் அணு கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா கொள்முதல் செய்த 27 அணு கடிகாரங்களில் 21 ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவிட்டன. அதில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக்கோளில் இருந்த 3 கடிகாரங்கள் பழுதடைந்துள்ளன. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோளில் 3 கடிகாரங்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள 3 கடிகாரங்கள் அடுத்த ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோளுக்குப் பயன்படுத்தப்படும்.
வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் அதிநவீன எக்ùஸல் வகையில் 16 ஆவது ராக்கெட். பிஎஸ்எல்வி சி 39 ராக்கெட் செயற்கைக்கோளை பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தும்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஒரு பார்வை: கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட்டிலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்டிலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி, கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி, செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. கடைசியாக ஜனவரி 20-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 இ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2016 மார்ச் 10-ஆம் தேதி ஆறாவது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எஃப் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. அதே ஆண்டில் ஏப்ரல் 28-இல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
பயன்பாடு என்ன ?: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கி. மீ. சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயண நேரம் குறித்து சரியான தகவல்களையும் அளிக்கும். மேலும், பேரிடர் மேலாண்மை, செல்லிடப்பேசிகள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக ஓட்டச்சொல்லி வாகனங்களை இயக்க வழிகாட்டும். இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிகாட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும்.
தோல்வி குறித்து விரிவான ஆய்வு: பிஎஸ்எல்வி சி39 - ஐஆர்என்எஸ்எஸ் 1எச் விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தோல்வி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: ராக்கெட் ஏவப்பட்டதில் இருந்து அனைத்து நிலைகளும் மிகச் சரியாக நடந்து கொண்டிருந்தன. ஆனால் ராக்கெட் பயணத்தின் 4-வது நிலையில் ராக்கெட்டின் ஹீட் ஷீல்ட் அமைப்பு ராக்கெட்டில் இருந்து பிரியவில்லை. இதன் காரணமாக சரியான சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்த முடியவில்லை. தோல்வி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் கிரண்குமார்.