நீட் தேர்வால் ஏற்பட்ட மாற்றம் இன்ஜி.,க்கு மவுசு அதிகரிப்பு
நீட்' தேர்வால், 200 இன்ஜி., மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதனால், இன்ஜி., படிப்பை உதறும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்று, இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு, 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன; 86 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. ஆண்டு தோறும், மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியலில் இடம் பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர், இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
மருத்துவ இடம் கிடைத்தால், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க மாட்டார்கள். மருத்துவ இடம் கிடைப்பது தாமதமானால், இன்ஜி., படிப்பில் சேர்ந்து விடுவர்.
பின், மருத்துவ இடம் கிடைத்ததும், இன்ஜி., கல்லுாரிகளில் மாற்று சான்றிதழ் வாங்கி சென்று விடுவர். அதிக மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்ட இந்த இடங்களில், குறைந்த மதிப்பெண் மாணவர்களை சேர்க்க முடியாது.
அதனால், மருத்துவத்துக்கு செல்லும் மாணவர்களால் ஒப்படைக்கப்படும் இடங்கள், நான்கு ஆண்டுகளும் காலியாகவே இருக்கும்.
கடந்த ஆண்டுகளில், ௫௦௦ முதல், ௧,௦௦௦ பேர் வரை, இன்ஜி., கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு பெற்ற பின், மருத்துவ படிப்பிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், இந்த ஆண்டு, மருத்துவ சேர்க்கை நடக்கும் நிலையில், அண்ணா பல்கலையில் சேர்ந்த, ௨00 இன்ஜி., மாணவர்கள் மட்டுமே, மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைத்து, மாற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் ௨ மதிப்பெண் படி, மருத்துவ சேர்க்கை நடக்கும் போது, அண்ணா பல்கலையில் சேரும் முன்னிலை மாணவர்களுக்கு, மருத்துவ சீட்டும் கிடைக்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு வந்ததால், பிளஸ் ௨வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அதனால், இன்ஜி., கல்லுாரிகளில் சேர்ந்த பின், மருத்துவத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை, வெகுவாக குறைந்துள்ளது. அதனால், கவுன்சிலிங்கில் முன்னிலை மதிப்பெண்ணில் சேர்க்கை வழங்கப்பட்ட, இன்ஜி., இடங்கள், மாணவர்கள் இன்றி வீணாவது குறைந்துள்ளது.