பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
வரி அமைப்பை ஆய்வு செய்வதற்கான தருணம் இன்னமும் வரவில்லை. பெட்ரோல்-டீசல் மீதான விலைகள், வெளிப்படையான வழிகளிலேயே மாற்றியமைக்கப்படுகின்றன. நகரங்கள் வாரியான விலைகள் நிலவரம் குறித்து குறுந்தகவல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படும் நடைமுறையானது, சந்தை நிலவரத்தை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. கலால் வரியை குறைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? எனக் கேட்கிறீர்கள். அதுபோன்ற திட்டம் இல்லை. அத்தகைய சூழ்நிலை எழுந்தால், அப்போது அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையைக் கைவிட்டு, நாள்தோறும் விலை நிர்ணயிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தின. இதையடுத்து, முதல் 2 வாரங்களில் அதன் விலைகள் லேசாக குறைந்தன. எனினும், ஜூலை மாதம் 3-ஆம் தேதிக்குப் பிறகு, பெட்ரோல்-டீசலின் விலைகள் உயர்ந்தபடி உள்ளன. நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.08 உயர்ந்து, ரூ.69.12ஆகவும், டீசலின் விலை ரூ.3.65 உயர்ந்து, ரூ.57.01ஆகவும் உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம், பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளின் அடிப்படையில், இந்த விலையில் சிறியளவில் வித்தியாசம் காணப்படும்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 5 முறை உயர்த்தியது. அதாவது, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.4.02-ம், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.6.97-ம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், 4 முறையாக வரியை மத்திய அரசு அதிகரித்தது. அப்போது பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.7.75-ம், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.6.50-ம் உயர்த்தப்பட்டது. இவை அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால், பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு மொத்தம் ரூ.11.77-ம், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.13.47-ம் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தைகளில் அதன் விலை உயர்வு ஏற்பட்டதை தனக்கு சாதகமாக்கி பெருமளவில் லாபம் ஈட்டும் வகையில் இந்த வரியை மத்திய அரசு உயர்த்தியது. இந்த வரி உயர்வினால், பெட்ரோல் விலை ரூ.6 வரை அதிகரிக்கிறது. இதே நிலைதான் டீசலுக்கும் காணப்படுகிறது.