சாலையோரம் நின்று விழிப்புணர்வு : நதிகளை இணைக்க புதிய முயற்சி
சாலையோரம் நின்று விழிப்புணர்வு : நதிகளை இணைக்க புதிய முயற்சி
நதிகளை இணைக்க வலியுறுத்தி, தன்னார்வலர்கள், மூன்று மணி நேரம், சாலை ஓரமாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும், இன்று நடைபெற உள்ளது.
நம் நாட்டில் பல ஜீவ நதிகள் மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுத்து, இணைக்கும் முயற்சியாக, 'நதிகளை மீட்போம்' என்ற, தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது. இதில், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிக ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அவர்கள், நதிகளை மீட்டெடுத்தல் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் தமிழக கிளை சார்பில், நாளை காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, மாநிலம் முழுவதும், முக்கிய சாலை ஓரங்களில், தன்னார்வலர்கள் நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இவர்கள், நீல நிற உடையில், 50 அடி இடைவெளியில், 'நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்' என்ற, வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி நிற்க உள்ளனர்.
இது குறித்து, இந்த அமைப்பினர் கூறியதாவது: எங்கள் கருத்தில் உடன்படும் அனைவரும் பங்கேற்கலாம். இது தொடர்பான படத்தை, rallyforrivers.org என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நதிகளை மீட்டெடுக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்போர், 80009 80009 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 83000 16000, 83000 57000, 96002 97449, 86374 98133, 83000 11000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த முயற்சிக்கு, இந்திய தொழில் துறை கூட்ட மைப்பு, இந்திய துணை ராணுவம், பாதுகாப்புத்துறையினர், ரயில்வே துறையினர், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுநல அமைப்பினரும் ஆதரவு அளித்துஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.