தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி? : பள்ளிக்கல்வி துறை விரைவில் முடிவு
தமிழகத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிரதமராக, 1986ல் ராஜிவ் இருந்த போது, மத்திய அரசு சார்பில், ஜவஹர் நவோதயா வித்யாலயா திட்டம் துவங்கப்பட்டது. கடந்த, ௧௯௮௬ கல்வி கொள்கையின்படி, கிராமப்புற மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில், மாவட்டத்திற்கு, ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட்டது. நாடு முழுவதும் இடம் பெயரும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு, அனைத்து மாநிலங்களிலும், கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாணவியருக்கு மூன்றில் ஒரு பங்கு; மாற்றுத்திறனாளி களுக்கு, மூன்று சதவீதம்; கிராமப்புற மாணவர்களுக்கு, ௭௫ சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு அனுமதி : தற்போது, நாடு முழுவதும், 598 நவோதயா பள்ளி கள் செயல்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், கூடுதலாக, 62 பள்ளிகளுக்கு, சமீபத்தில், மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நவோதயா பள்ளிகள் துவக்க வேண்டும் என்றால், மாநில அரசு, 30 ஏக்கர் இடம் ஒதுக்கித் தர வேண்டும். அதில், கட்டடம் கட்டி, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 200 ரூபாய் கல்வி கட்டணத்தில், விடுதி வசதியுடன் கூடிய, உண்டு உறைவிட பள்ளியாக, நவோதயா பள்ளிகள் செயல்படும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்படி, நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன.
பல ஆண்டுகளாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், நவோதயா பள்ளி மாணவர்களே, நாட்டில் அதிக தேர்ச்சி பெறுகின்றனர். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி யுடன், அந்தந்த மாநில மொழியை கற்றுக் கொடுக்கும் மும்மொழி திட்டம், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. 6 - 8ம் வகுப்பு வரை, மாநில மொழிகளில் பாடங்கள் நடத்தப்படும்.
கூடுதலாக, ஆங்கிலம், ஹிந்தி கற்றுத்தரப்படும். 9ம் வகுப்பு - பிளஸ் ௨ வரை, ஹிந்தி அல்லது ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படும். இத்திட்டம் அறிமுகமான காலத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களால், தமிழகத்தில், நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கொள்கையை, தமிழக அரசு இன்னும் மாற்றாததால், நவோதயா பள்ளிகள் இல்லை.
பெற்றோர் கோரிக்கை : தற்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலேயே ஹிந்தி பயிற்றுவிக்கப்படுவதால், நவோதயா பள்ளிகளையும் அனுமதிக்கலாம் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கேற்ற வகையில், தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்த, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அனுமதி வழங்கப்பட்டால், தமிழக கிராமப்பற மாணவர்கள், தமிழ் ஆங்கிலம், ஹிந்தியுடன், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தரமான கல்வி பெறலாம். மேலும், மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.