4 ஆண்டுகளில் 503 பகுதி நேர நூலகங்கள் திறப்பு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 503 பகுதி நேர நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி தெரி வித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் புதிய கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் சட்டப்பேரவை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.82 லட்சம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு நிதி ரூ.9.90 லட்சம் என ரூ.91.90 லட்சத்தில், 3 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் இந்த கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. நூல் அடுக்குகள், மேசைகள், 16 கண்காணிப்பு கேமராக்கள், 16 ஒலிப்பெருக்கிகள், கணினி மற்றும் இணையதள வசதி ஆகியவை தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கிளை நூலகத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி, பால் வளத்துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம் ஆகியோர் பங்கேற்று, புதிய கிளை நூலகத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி பேசியதாவது: தமிழகத்தில் 2011-12 முதல் 2014-15 வரையான, கடந்த 4 ஆண்டுகளில் 503 புதிய பகுதி நேர நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 256 பகுதி நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்களாகவும், 256 ஊர்ப்புற நூலகங்கள், கிளை நூலகங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில், திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர், கடம்பத்தூர், தண்டுரை ஆகிய கிளை நூலகங்கள், தணிகாச்சலம் நகர் ஊர்ப்புற நூலகத்துக்கு புதிய கட்டிடம் ஆகியவை அமைக்கப்படும் என்று அவர் பேசினார்.