நுழைவு தேர்வு பயிற்சி புத்தகம்: அடுத்த வாரம் வெளியீடு
''பிளஸ் 2 மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவும், 54 ஆயிரம் வினா - விடைகள் அடங்கிய புத்தகம், ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறையில் உள்ள, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 413 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இரண்டு நாள் நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும் பயிற்சி வகுப்புகளை, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்தார்.
பதவி உயர்வு : பயிற்சி புத்தகத்தை வெளியிட்டு, அவர் பேசியதாவது: முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கோரிக்கை, விரைவில் பரிசீலிக்கப்படும். பிளஸ் 2 மாணவர்கள், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், 412 மையங்களில், சனிக்கிழமைகளில், மூன்று மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 54 ஆயிரம்வினா - விடைகள் அடங்கிய, நுழைவுத் தேர்வு பயிற்சி புத்தகம், ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
மாணவர்களுக்கு, சுய விபரங்கள் அடங்கிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். 437 கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுவதும், 6,029 பள்ளிகளுக்கு, கணினிகள் வழங்கப்பட உள்ளன. அவற்றை நிர்வகிக்க, கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகள், கணினி அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
ரூ.33 கோடி : சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்துக்கு, 33 கோடி ரூபாய் செலவில், எம்.ஜி.ஆர்., பெயரில் புதிய கட்டடம் கட்டப்படும்.
தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 10௦ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10௦ ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 20௦ ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்த ஆண்டு, 920௦ மாணவர்களுக்கு, இந்த பரிசு தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் வரவேற்றார். பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், நன்றி தெரிவித்தார். அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், தேசிய மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலை பேராசிரியர் குமார் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் மாற்றமா? : பள்ளிக்கல்வித் துறையில், அதிகாரிகளுக்கு, போதுமான அலுவலக வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே, 'மாணவர்கள் சேர்க்கை இல்லாத வகுப்பு கட்டடங்கள், அலுவலகமாக மாற்றப்படும்' என, செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 'மாணவர்களின் முன்னேற்றத்துக்கு, எந்த பணிகளையும், அரசு முன்னெடுக்கும். இதற்காக, யாரையும், எந்த பொறுப்பில் இருந்தும் மாற்ற தயங்க மாட்டோம்' என்றும், அவர் கூறினார்.