ரேஷன் கார்டு வகை மாற்றம் : இணையதளத்தில் குழப்பம்
ரேஷன் கார்டுகள், வகை மாற்றம் செய்த நிலையில், பொது வினியோக திட்ட இணையதளத்தில், பழைய விபரங்களே இருப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத கார்டு என, பல வகைகளில், ரேஷன் கார்டுகள் இருந்தன. உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது, ரேஷன் கார்டுகள், 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை' என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப, வழக்கம் போல உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. ஆனால், பொது வினியோக திட்டத்தின் இணையதளத்தில், ரேஷன் கார்டுகளின் புதிய வகையை வெளியிடாமல், அரிசி, சர்க்கரை கார்டு என, பழைய விபரங்களே உள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு வகைகள், எதற்காக அந்த பெயர் வந்தது உள்ளிட்ட விபரங்கள், மென்பொருள் வடிவில் தயாராக உள்ளன. அவை, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிந்த பின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்' என்றார்.