அண்ணா பல்கலையில், கேம்பஸ் முகாம் ரூ.28 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலையில் நடந்த, 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு முகாமில், அதன் மாணவர்களுக்கு, 28 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் சேர்கின்றனர். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கேம்பஸ் எனப்படும், வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முதல் கட்டம்
ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பல்கலையில், மூன்று கட்ட கேம்பஸ் முகாம் நடத்தப்படும். இந்த ஆண்டு, முதல் கட்ட முகாம், ஆக., ௩ல் துவங்கியது. இதில் பங்கேற்க, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்தது; 61 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன.'மைக்ரோசாப்ட், மிந்த்ரா, பிளிப்கார்ட், பேபால், சிட்டி கார்ப்' என, பல முக்கிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் கட்ட முகாமில், ௧௦௦ பேருக்கு, அதிக சம்பளத்தில் பணிவாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில், 'மிந்த்ரா' நிறுவனம், அதிகபட்சமாக, ஆண்டுக்கு, லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயித்துள்ளது. அதாவது, மாதம்,2.30லட்சம் ரூபாய் சம்பளத்தில், பணி வாய்ப்பு வழங்கியுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனமும், ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கு மேல், சம்பளம் நிர்ணயித்து, பணி வாய்ப்பு தந்துள்ளது.
இது குறித்து, பல்கலை பதிவாளர், எஸ்.கணேசன் கூறுகையில், ''அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, முதல் கட்டமாகவும், இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு, இரண்டாம் கட்டமாகவும், கேம்பஸ் முகாம் நடத்தப்படும். ''கல்லுாரிகள், தங்கள் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில், தற்போதே பயிற்சி அளித்து, தயார்படுத்த வேண்டும்,'' என்றார்.
மாணவர்களுக்கு பயிற்சி
கேம்பஸ் முகாம் நடத்தும், தொழில் மைய இயக்குனர், டி.தியாகராஜன் கூறுகையில், ''கேம்பஸ் தேர்வில், மாணவர்கள் தோல்வி அடையாமல், வேலைவாய்ப்பு பெறும் வகையில், அவர்களுக்கு, பெரும் நிறுவனங்களின் மனிதவள அதிகாரிகளால் பயிற்சி தரப்படுகிறது. ''முகாமில் பங்கேற்கும் முறை குறித்து, பயிற்சி கையேடு தயாரித்துள்ளோம். அதை, placement.annauniv.edu என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்,'' என்றார்.
தொழில் மைய கூடுதல்
இயக்குனர், டி.கலைச்செல்வன் கூறுகையில், ''முன்பெல்லாம், 'ஜெனரிக் ஸ்கில்' எனப்படும், பொதுவான திறன் இருந்தால், வேலை கிடைக்கும். ''தற்போது, 'நிச்சி ஸ்கில்' எனப்படும், குறிப்பிட்ட துறையில் ஆழமான தனித் திறமைகளை, 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
''இதற்கு, மாணவர்கள் தயாரானால் மட்டுமே, கேம்பஸ் முகாமில், அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற முடியும்,'' என்றார்.