மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப் ஏ, பி பணியிடங்கள் எவை?
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்கீழ் குரூப் ஏ, பி போன்ற உயர் பதவிகளில் அவர்களுக்கேற்ற பதவியிடங்கள் எவை என்பதை தமிழக அரசு வரையறுத்துள்ளது.
இதற்கான உத்தரவை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் நசிமுதின் வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, குரூப் ஏ மற்றும் பி தொகுதி பணியிடங்களில் 263 இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அவர்களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், குரூப் ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களில் அவர்களுக்கு எந்தெந்த பதவியிடங்களை ஒதுக்கலாம் என்பதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 -ன் கீழ் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மாநில மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையாளர் அவற்றை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி மாவட்ட நீதிபதி, பட்ட மேற்படிப்பு ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் ஆகிய குரூப் ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களில் அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் நசிமுதின் தெரிவித்துள்ளார்.