4 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கியது
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் 4 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கியது. மின் உற்பத்தியை படிப்படியாக அதிகரித்து 1000 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணுஉலையின் மூலம் கடந்த 2013 அக்.22ல் மின் உற்பத்தி தொடங்கியது. 2014 ஜூன் 7ல் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. முதல் அணு உலையை கடந்த ஆண்டு ஆக.10ல் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து 2வது அணு உலையிலும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு கடந்த ஆண்டு ஆக.29ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த ஜனவரி 21ல் 2வது அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் கூடங்குளத்தில் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.
இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஏப்ரல் 13ம் தேதி கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இங்கு 163 எரிகோல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஏறத்தாழ 3ல் ஒரு பங்காக 49 யுரேனியம் எரிகோல்கள் தானியங்கி இயந்திரம் மூலமாக புதிதாக பொருத்தப்பட்டன. கடந்த 4 மாதங்களாக நடந்த இந்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியது.
இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஜின்னா கூறியதாவது: கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்திக்கு முந்தைய நிகழ்வான அணுப்பிளவு சோதனை, கடந்த 24ம் தேதி காலை 9.28 மணிக்கு தொடங்கியது. சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து நேற்று காலை 6.37 மணிக்கு முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் கட்டமாக 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
2வது அணு உலை ஜெனரேட்டர் பழுது
கூடங்குளம் அணு உலைகளில் இருந்து இதுவரை 1875 கோடி யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலை கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ஜெனரேட்டர் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.