நிதியாண்டில் மாற்றம் இருக்காது
புதுடில்லி: பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஏப்ரல் - மார்ச் நிதியாண்டில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. எனினும் முன்கூட்டியே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
150 ஆண்டு கால நடைமுறை
ஒவ்வொரு ஆண்டும் பிப்., 28 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த நடைமுறை, 150 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. எனினும் நடப்பு ஆண்டில் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பிப்., 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 150 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் ஏப்ரல் - மார்ச் நிதியாண்டு நடைமுறையை மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு பதில், ஜனவரி - டிசம்பர் நிதியாண்டு நடைமுறை மீது மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. கடந்த ஜூலை, 21ம் தேதி லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ' நிதியாண்டை மாற்றும் திட்டம் மத்திய அரசின் ஆய்வில் உள்ளது' என, தெரிவித்து இருந்தார்.இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சாரியா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குழு நிதியாண்டை மாற்ற வேண்டும் என்ற திட்டத்திற்கு முழு ஆதரவு தரவில்லை. எனினும், நிதி ஆயோக் அமைப்பு, நிதியாண்டை மாற்றினால், சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்பட முடியும் என கருத்து தெரிவித்து இருந்தது.
மத்திய அரசு தயக்கம்
எனினும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல் உள்ளிட்டவையால் ஏற்கனவே நாடு முழுவதும் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிதியாண்டு மாற்றும் திட்டத்தை, 2018 - 19ம் ஆண்டில் கொண்டு வர மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஜனவரி முதல் நிதியாண்டு துவங்க வேண்டும் என்றால், வரும் அக்டோபர் மாதமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. எனவே, நிதியாண்டு இப்போதைக்கு மாறாது என்றே கூறப்படுகிறது. எனினும், பிப்., 1ம் தேதிக்கு முன்பே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.