சித்த மருத்துவப்படிப்பில் சேர 6 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பம்
சித்த மருத்துவப்படிப்பில் சேர 6 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். காலதாமதம் இல்லாமல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும் என மாணவ–மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மதுரை திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி கல்லூரியும், நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியும், சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியும், அரசு யுனானி மருத்துவக்கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் என சுமார் 1,500 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள கடந்த 2–ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 6 ஆயிரத்து 100 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளித்துள்ளனர். விண்ணப்பங்களை பெற இன்றும் (30–ந் தேதி), பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க நாளையும் (31–ந் தேதி) கடைசி நாள் ஆகும்.
இதன்பின்பு, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக்கல்லூரிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
இந்த அனுமதியை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் 3–வது வாரத்தில் தான் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘நீட்’ தேர்வு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ–மாணவிகள் சித்த மருத்துவ கலந்தாய்வை விரைந்து நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.