பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலை துறை முயற்சி
தமிழகத்தில் பழங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, சாகுபடி பரப்பை விரிவாக்கம் செய்யும் பணிகளை, தோட்டக்கலைத் துறை முடுக்கிவிட்டுஉள்ளது. தமிழகம் முழுவதும், 7 லட்சம் ஏக்கரில், பல்வேறு விதமான பழப் பயிர்கள் சாகுபடி நடக்கிறது. இதன்படி, ஆண்டுக்கு, 88 லட்சம் டன் பழ வகைகள் உற்பத்தியாகின்றன. இது, போதுமானதாக இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து, பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. கூடுதல் விலை கொடுத்து, மக்கள் அவற்றை வாங்க வேண்டிஉள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பழங்கள் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கச் செய்யும் முயற்சியில், தோட்டக்கலைத் துறை ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் பழங்கள் உற்பத்தியில், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவை அடுத்து, மூன்றாம் இடத்தில், தமிழகம் உள்ளது. வாழை சாகுபடியில் முதலிடத்தில் உள்ள நாம், மற்ற பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்போது, 7.08 லட்சம் ஏக்கராக உள்ள சாகுபடி பரப்பை, 7.75 லட்சம் ஏக்கராக உயர்த்த, முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, தோட்டக்கலைத் துறையில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரமயமாக்குதல் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் வழியாக, விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.