அரசு இசேவை மையங்களில் இனி 15 வகையான சான்றிதழ் பெறலாம்
அரசு இசேவை மையங்களில் இனிமேல் கூடுதலாக அரசுத்துறையின் 15 வகையான சான்றிதழ்களை பெறலாம். இதற்கான உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. பல்வேறு சேவைகள் வழங்கி வருகின்ற தமிழக அரசின் இசேவை மையங்களில் தற்பொழுது சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ், கணவனால் கைவிட்ப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் அலுவலகங்களுக்கு அலையாமல், இங்கு விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று வருகிறார்கள். தற்போது அவர்கள் பலன் பெறும் வகையில் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்களை இசேவை மையங்கள் மூலம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி கடந்த மாதமே சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் அறிவிக்கப்பட்டாலும், இரண்டு நாட்களுக்கு முன்புதான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாய வருமானம், சிறுகுறு விவசாயி, விதவை, கலப்புத்திருமணம், வேலையில்லாதவர், குடிபெயர்வு, பள்ளி கல்லூரி சான்றிதழ் நகல், வாரிசு, வசிப்பிட, சொத்து மதிப்பு, அடகு வணிக உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்பட்ட வகுப்பினர் என அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம். லஞ்சம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல் சான்றிதழ்கள் பெற இசேவை மையங்கள் உதவி வருகின்றன.