எரிசக்தி மைய பணி முடிந்தது: ரூ.40 கோடி கிடைக்குமா?
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் அமைக்கும் பணி முடிவு அடைந்ததால், மத்திய அரசிடம் இருந்து, 40 கோடி ரூபாய் நிதி, விரைவாக கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மின் வாரியத்திடம் எழுந்துள்ளது. வெளிநாடுகளில், காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட, புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், தனி வழித்தடங்களில் எடுத்து செல்லப்படுகிறது. அவற்றை கண்காணிக்க, தனி பகிர்ந்தளிப்பு மையங்கள் உள்ளன.
அதனால், அந்த மின் நிலையங்களில் உற்பத்தி யாகும் மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், தமிழகத் தில் தான், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அதிகம் உள்ளன. இருப்பினும், தனி வழித்தடம் இல்லாததால், முழுவதுமாக பயன்படுத்த முடிவதில்லை. தற்போது, 'கிரீன் காரிடார்' என்ற பெயரில், பசுமை மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மின் வளாகத்தில், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளது. அங்கிருந்து தான், அனைத்து வகை மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் தேவை, அதிக திறன் துணை மின் நிலையம் மற்றும் வழித்தடம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த மைய கட்டடத்தின் முதல் தளத்தில், வெளிநாடுகளில் இருப்பது போல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: எரிசக்தி மேலாண்மை மையத்தில், காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி மற்றும் வழித்தட கண்காணிப்பு பணிக்கான மென்பொருளை, மத்திய அரசின், 'பவர் கிரிட்' நிறுவனம் தான் பொருத்த வேண்டும்.
இதுவரை, அந்நிறுவனம் பொருத்தவில்லை. தற்போது, மையம் அமைக்கும் பணிகள், 90 சதவீதம் முடிவு அடைந்துள்ளன. எனவே, பவர் கிரிட் நிறுவனம், மென்பொருளை பொருத்துவதுடன், மையம் அமைத்ததற்கான செலவு, 40 கோடி ரூபாயையும், விரைவாக வழங்க வேண்டும். இதன் வாயிலாக, இங்கிருந்து, அடுத்த ஆண்டு முதல், காற்றாலை மின்சாரம் துல்லியமாக கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.