மதுரையில் தேசிய மருந்தியல் கல்லூரி
'தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக, மதுரையில், தேசிய மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று சென்னை வந்தார். அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், அனந்தகுமார் பேசியதாவது:
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நினைவுகூரும் கண்காட்சியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்துள்ளார். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி.
தென் மாநிலங்கள் முதல், கோல்கட்டா வரை சாலைகள் இணைப்பிலும், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியதிலும், மத்திய அமைச்சராக அவரது பங்களிப்பை மறக்க முடியாது.
தென் மாநிலங்களின் நலனுக்காக, பார்லிமென்டில் வலுவான குரலாக, வெங்கையா நாயுடு செயல்பட்டார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், வெங்கையாவின் பங்களிப்பு குறித்து, அது தொடர்பான நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே, ஒன்பது முறை அவரின் பெயரை சொல்லி, நன்றி தெரிவித்தார். தற்போதைய இந்த நிகழ்ச்சியில், தமிழகத்திற்கான, சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
சென்னையில், மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த, மணலியில் உள்ள, சென்னை உரத்தொழிற்சாலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
சென்னையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் மற்றும் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரியில், தற்போதுள்ள, ௧,௨௦௦ மாணவர் சேர்க்கை இடங்கள், ௫,௦௦௦ ஆக உயர்த்தப்பட உள்ளன
தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக, மதுரையில், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, விரைவில் அமைக்கப்படும். இது, தேசிய தொழில்நுட்ப, மேலாண் கல்லுாரிகளான, ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம்.,க்கு இணையாக செயல்படும்
நாடு முழுவதும், ௨,௨௪௮ இடங்களில், 'ஜெனிரிக்' என்ற, குறைந்த விலை மருந்துக்கடைகள் உள்ளன. தமிழகத்தில், ௫௦௦ இடங்களில், இந்த மருந்து கடைகள் திறக்கப்படும்.