தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு : * யு.ஜி.சி., விதிமுறை பின்பற்ற வலியுறுத்தல்
பாரதியார் பல்கலையில் தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு பதிலாக, யு.ஜி.சி., விதிமுறைப்படி நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு, தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல், சமீபத்தில் நடந்தது. இவர்களுக்கு, மாதம், 12 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள், 2017 - 18ம் கல்வியாண்டு வரை அல்லது நிரந்தர பேராசிரியர்கள் தேர்வு செய்யும் வரை பணிபுரிய உள்ளனர்.
யு.ஜி.சி., விதி : இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்கலை பேராசிரியர்கள், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., விதிமுறைப்படி, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, பல்கலை ஆசிரியர்கள் கூறியதாவது: வரலாறு மற்றும் சுற்றுலா துறை துவங்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாகியும், இதுவரை ஒருவர் மட்டுமே நிரந்தர பேராசிரியராக உள்ளார்; மற்றவர்கள் தற்காலிக பேராசிரியர்கள். யு.ஜி.சி., விதிமுறைப்படி ஒரு துறைக்கு, ஆறு நிரந்தர பேராசிரியர்கள் இருக்க வேண்டும். மற்ற துறைகளில் இந்நடைமுறை உள்ளபோது, வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு மட்டும் தற்காலிக பேராசிரியர்களாகவே உள்ளனர்.
மேலும், அண்ணாமலை பல்கலை உபரி ஆசிரியர்களை, இங்கு பணியமர்த்தும் நோக்கில், நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
காலி பணியிடம் : ஏற்கனவே, அரசுக் கல்லுாரிகளில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர் களை நியமிப்பதற்கு, எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே, பாரதியார் பல்கலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.