வடமாநில குழந்தை தொழிலாளர் தமிழகத்தில் படிக்க புது திட்டம்
தமிழகத்தில் உள்ள வடமாநில குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, இங்குள்ள பள்ளிகளில் படிக்க வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். எனவே, ஓட்டல், டீ கடை, கல்குவாரிகள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருந்தால், மீட்டு சிறப்பு பள்ளிகளில் சேர்க்க, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே பல இடங்களில் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களையும் மீட்டு, வேலைக்கு செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
அதேசமயம் மகாராஷ்டிரா, உ.பி., பீகார், ஒடிசாவை சேர்ந்த ஏராளமானோர் தமிழகத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களின் தாய் மொழி வேறு என்பதால், அவர்களை மீட்டாலும் எந்த பள்ளியில் சேர்ப்பது என்ற குழப்பம் இருந்தது.
இந்நிலையில் இவர்களை இங்குள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.