பெண்கள் கல்வி மையத்துக்கான நிதி உதவி ரத்தாகாது: யு.ஜி.சி.,
பெண்கள் கல்வி மையத்துக்கான நிதி உதவி ரத்து செய்யப்படாது' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.நாடு முழுவதும், பெண்களின் படிப்புக்காக கல்வி மையங்களை, மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில், சென்னைப் பல்கலை, மதுரை காமராஜர், பாரதிதாசன், தெரசா பல்கலை உட்பட, ஒன்பது பல்கலைகளிலும், நாடு முழுவதும், ௧௬௭ இடங்களிலும், இந்த மையங்கள் செயல்படுகின்றன.பெண்கள் கல்வி மையங்களுக்கான, ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும், மத்திய அரசின், யு.ஜி.சி., சார்பில், நிதி உதவி அளிக்கப்படுகின்றன. இந்த மையங்களுக்கான நிதி உதவியை, அடியோடு ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், 'பெண்கள் கல்வி மையங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை, ரத்து செய்யும் திட்டம் எதுவுமில்லை; தற்போது வழங்கப்படும் நிதி உதவி தொடரும்' என, யு.ஜி.சி., திட்டவட்டமாக அறிவித்துள்ளது.