திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறையில் காலிப் பணியிடங்கள்: தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, செய்யாறு கல்வி மாவட்டத்தில் ஒரு கட்டட ஆலோசகர் (சிவில் கன்சல்டன்ட்) பணியிடம் காலியாக உள்ளது.
இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு கட்டுமானப் பணியில் 2 ஆண்டுகள் அனுபவத்துடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட சிவில் என்ஜினீயரிங் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணக்கு மேலாளர்: திருவண்ணாமலை கல்வி மாவட்டத்துக்கான ஒரு உதவி மற்றும் கணக்கு மேலாளர் (அசிஸ்டன்ட் கம் டேலி மேனேஜர்) பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணிக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட வணிகவியல், வணிக நிர்வாகம், வங்கி நிர்வாகம், கூட்டுறவியில் உள்ளிட்ட ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன், கணினியில் டேலி மென்பொருள் கையாளும் திறமை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (1 நிமிடத்துக்கு 45 வார்த்தைகள்) தட்டச்சு செய்யும் திறமை, உரிய கணினி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர்: செய்யாறு கல்வி மாவட்டத்தில் ஒரு தட்டச்சர் மற்றும் கணினி விவரப் பதிவர் (டைப்பிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம், கணினியில் தமிழ், ஆங்கிலத்தில் (1 நிமிடத்துக்கு 45 வார்த்தைகள்) தட்டச்சு செய்யும் திறமை, இணையதளத்தை கையாளும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
இந்த 3 பணியிடங்களுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியிட்ட ரூ.5 அஞ்சல் வில்லை ஒட்டிய அஞ்சல் உறையுடன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.