கவுன்சிலிங்கில் போலி இருப்பிட சான்று: சுகாதார செயலர் எச்சரிக்கை
சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன், போலி சான்றிதழ், மருத்துவ கவுன்சிலிங்,
சென்னை: போலி இருப்பிட சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், நீட் தேர்வு அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கவுன்சிலிங் இன்று துவங்கியது. முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணையை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: கவுன்சிலிங்கில், போலி இருப்பிட சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 9 மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் வழங்கியதாக புகார் வந்துள்ளது. முறைப்படி புகார் வந்தவுடன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பல மாநிலங்களில் போலி இருப்பிட சான்றிதழ் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கேரளாவில் படித்த மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக போலி இருப்பிட சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது.