உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணினி வசதியுடன் கூடிய கல்வி
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணினி வசதியுடன் கூடிய கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. காலையில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை அவர் தொடக்கி வைத்து மேலும் பேசியது:
தமிழக பள்ளி மாணவர்கள் அனைத்து விதமான தேசிய தகுதித் தேர்வுகளையும் எளிதில் சந்திக்கும் வகையில் 54 ஆயிரம் வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்கள் எங்கு உள்ளனர் என்பதை பெற்றோர் அவ்வபோது தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கணினி வசதியுடன் கூடிய கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படும். எனவே வரும் காலங்களில் தமிழக மாணவர்கள் தேசிய தகுதித் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ள முடியும் என்றார் அவர்.