எடைக்கு போகும், லேப் - டாப் : ஒரு கிலோ 3,000 ரூபாய்
டில்லியில் உள்ள, கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில், 'லேப் - டாப்'களை எடைக்கு விற்கும் அவலம் நிலவுகிறது.
டில்லி புறநகர் பகுதியில், கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்கும், 'நேரு பிளேஸ்' மார்க்கெட் உள்ளது; இங்கு, அனைத்து வகையான கம்ப்யூட்டர், லேப் - டாப் மற்றும் உதிரி பாகங்களையும், மலிவு விலையில் வாங்கலாம். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லேப் - டாப்கள், கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன; ஒரு கிலோ, 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நமக்கு தேவையான வசதிகள் உடைய லேப் - டாப்பை, அதற்கான டீலர்களிடம் வாங்க வேண்டுமெனில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.
இது குறித்து, நேரு பிளேஸ் மார்க்கெட் சங்க தலைவர், மஹேந்திர அகர்வால் கூறியதாவது: ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட் இது. நாட்டின் மற்ற பகுதிகளை விட, இங்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, சரக்கு கட்டணம் குறைவு. இதன் காரணமாக, இங்குள்ள விற்பனையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து, அதிகளவில் கம்ப்யூட்டர் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்வதால், இங்கு, எப்போதும் விலை குறைவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.