நெட் தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்
'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவில் பலர், ஆதார் எண் விபரங்களை குறிப்பிடாமல் உள்ளனர்.
இது குறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களின் சுய விபரங்களில் தவறு ஏற்படாமல் இருக்க, ஆதார் எண், பிறந்த தேதி போன்ற விபரங்கள், கட்டாயம் தேவை. காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தவர் மட்டும், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.