வாகனம் ஓட்டும் போது அசல் லைசென்ஸ் கட்டாயம்: செப்டம்பர் முதல் அமலாகிறது
''செப்டம்பர் முதல், வாகனம் ஓட்டும் போது, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பேட்டரி பஸ் சோதனை ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள், சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்தன. இதில் பங்கேற்ற, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில், சாலை விபத்துக்களை குறைக்க, அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், ஜூன் வரையிலான கால கட்டத்தில், சென்ற ஆண்டை விட, இந்தாண்டு, 3,244 விபத்துக்களும், 309 உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றை, மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிவப்பு விளக்கை தாண்டி செல்லுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட, விதிமீறல்களில் ஈடுபட்ட, 9,500 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். செப்., முதல், வாகனம் ஓட்டும் போது, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம். அரசு போக்குவரத்து
கழகத்திற்கு, விரைவில், 2,000 பஸ்கள் வாங்கப்படும்; அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கும் முன், அனைத்து பஸ்களின் கூரைகளும் சரி செய்யப்படும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நன்றாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, மூன்று மணி நேரம் சார்ஜ் செய்து, 300 கி.மீ., வரை ஓடக்கூடிய, 12 மீட்டர் நீளமுள்ள, பேட்டரி பஸ்சை, சோதனை ரீதியில் இயக்கி பார்த்தோம். தெலுங்கானாவை சேர்ந்த, கோல்டு ஸ்டோன், பி.ஒய்.டி., நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பஸ்சில், குளிர்சாதன வசதி, வைபை வசதி, ஊனமுற்றோருக்காக படிக்கட்டு இறங்கும் வசதி என, பல வசதிகள் உள்ளன.இந்த பஸ், சென்னையில் சோதனை ஓட்டமாக, ஒரு மாதம் இயக்கப்படும். பயணிகள், டிரைவர்களின் கருத்து அறிந்து, பஸ்சில் மாறுதல்கள் செய்த பின், படிப்படியாக, இந்த ஆண்டுக்குள், 200 பஸ்கள் வாங்கப்படும். தொடர்ந்து, தமிழகம் முழுக்க, பேட்டரி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், சுற்றுச்சூழல் மாசு குறைவதோடு, எரிபொருள் செலவும் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.