+2 பொதுத்தேர்வு: மின் ஊழியர்கள் அலர்ட்
பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கி, இம்மாத இறுதி வரை நடக்கிறது. கோடைக் காலம் துவங்கும் முன், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் உள்ளது.இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க, மின் வாரியம், ஊழியர்களை, 'அலர்ட்' செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு மையங்களில், மின் தடை ஏற்படக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்ட படி, மார்ச் முதல், மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நிறுத்தப்படும்.தேர்வு மையங்களுக்கு மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களை, காலை, 7:00 மணி முதல், மாலை வரை, பிரிவு அலுவலக ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும்.பழுது ஏற்பட்டால், உடனே சரி செய்ய வேண்டும். தேர்வு முடியும் வரை, குறித்த நேரத்தில் அலுவலகம் வருமாறு, பிரிவு அலுவலக உதவி செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.