எம்.பி., - எம்.எல்.ஏ.,வை திரும்ப பெற மசோதா
மக்களின் அதிருப்திக்கு ஆளான, சரியாக செயல்படாத, எம்.பி., - எம்.எல்.ஏ.,வை திரும்பப் பெறும் உரிமையை, வாக்காளர்களுக்கு அளிக்கக் கோரும், தனிநபர் மசோதாவை, பா.ஜ., - எம்.பி., வருண், தாக்கல் செய்துள்ளார்.மத்திய அமைச்சர் மேனகாவின் மகனும், பா.ஜ.,வின் இளம் தலைவருமான, லோக்சபா, எம்.பி., வருண் தாக்கல் செய்துள்ள தனிநபர் மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:எம்.பி., - எம்.எல்.ஏ., போன்றவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. அதுபோல், சரியாக செயல்படாத, அதிருப்திக்கு ஆளானவர்களை திரும்பப் பெறும் உரிமையையும் வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும்.இதற்காக, ஒரு தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களில், 25 சதவீதம் பேர் கையெழுத்திட்ட மனுவை, சபாநாயகருக்கு அளிக்கலாம். அந்த மனுவின் நம்பகத்தன்மையை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். இதன்பின், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வை திரும்பப் பெறுவதற்கான ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். மொத்த ஓட்டுப்பதிவில், 75 சதவீதம் பேர் திரும்பப் பெறுவதற்கு ஆதரவாக ஓட்டளித்தால், அவரது பதவியை பறித்து, இடைத் தேர்தல் நடத்தலாம்.
இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.