கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜிசி புதிய அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகளை பெற ஆதார் எண் கட்டாயமில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஆதார் எண்ணை அறிமுகம் செய்ததோடு, அனைத்துத் திட்டங்களுக்கும் அதை கட்டாயமாக்க முனைந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் மானியத் திட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட முக்கியத் திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண் முறையை நடைமுறைப்படுத்தலாம் என உத்தரவிட்டது.
இருந்தபோதும், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஊதியம், சிறப்பு ஓய்வூதியம் என்பன உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. இதுபோல், யுஜிசி சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், யுஜிசி புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "மாணவர்களுக்கு ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை இல்லை என்பதற்காக மத்திய அரசு கல்வி உதவித் தொகைகள் மறுக்கப்படமாட்டாது எனவும், அதற்குப் பதிலாக மாணவர்கள் வேறு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட அத்தாட்சியை சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம், ஆதார் அட்டையை பெறாத மாணவர்களும் கல்வி உதவித் தொகைகளை பெற வழி ஏற்பட்டுள்ளது.