தமிழ் நூல்களை மொழி பெயர்க்க உத்தரவு
பண்டைய தமிழ் நுால்களை, பிற மொழிகளில் மொழிபெயர்க்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அவரது அறிக்கை: தமிழின் பெருமையை, பிற நாட்டினரும் அறியும் வகையில், திருக்குறள், சீனம், அரபு மற்றும் கொரிய மொழிகளிலும்; பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள்,
சீனம் மற்றும் அரபு மொழிகளிலும், அரசால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பண்டைய தமிழ் நுால்கள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில், பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் தேர்வு செய்யப்பட்ட நுால்கள், உலக மொழிகளான, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும்; இந்திய மொழிகளான, மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். இந்தப் பணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். இதனால், தமிழ் மொழியின் வளம் குறித்து, உலக மக்கள் அறிய, மேலும் வழி ஏற்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.