டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
இணையதளம் முடங்கியது குறித்து, 'குரூப் - 4' தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் கால அவகாசம், வரும், 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட ஏழு பதவிகளில், 5,451 காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நவ., 6ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஆக., 9ல் துவங்கியது; விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள்.
செப்., 6 முதல், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தின் ஆன்லைன் விண்ணப்பப் பிரிவில் கோளாறு ஏற்பட்டதால், பல லட்சம் பேர், விண்ணப்பங்களை பதிவேற்ற முடியாமல் திணறினர். இதுகுறித்து, விரிவான செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, விண்ணப்பம் செலுத்துவதற்கான காலக்கெடு, வரும், 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன் போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில், அதிகப்படியானோர் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ, வேறு பிரச்னைகளோ எழ வாய்ப்பு
உள்ளது. 'குரூப் - 4' தேர்வுக்கு, கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க, அதிக விண்ணப்பதாரர்கள் முயற்சித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் கோரிக்கை அடிப்படையில் விண்ணப்பப் பதிவுக்கு, செப்., 14 வரையும், தேர்வுக் கட்டணம் செலுத்த, செப்., 16 வரையும் கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும், கால நீட்டிப்பு வழங்கப்படாது; விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இறுதி நாள் வரை காத்திராமல், முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.